சுயம்புவாக உருவாகிய அம்மன், கேட்டதை தருகிறாள். கண் நோய் தீர்க்கிறாள். அம்மை நோயை குணப்படுத்துகிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ளது செங்கம் புதூர் மாரியம்மன் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவில் கோவில் வளாகம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான வெளிமாநில பக்தர்கள் வருவதால் இக்கோவில் எப்போதும் பக்தர்களால் நிறைந்திருக்கிறது.

கோவில் தலவரலாறு குறித்து பரம்பரை அர்ச்சகர் தினகரன் நம்மிடம், 700 ஆண்டுகளுக்குமுன்பு செங்கத்தை தலைநகராகக் கொண்டு ஜவ்வாதுமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளை நன்னன் என்கிற மன்னன் ஆட்சி செய்துகொண்டு இருந்தான். அக்காலத்தில் உழவர் ஒருவர் தனது நிலத்தில் உழவு ஓட்டிக்கொண்டு இருந்தபோது, அவரது கலப்பை குத்தி ஒரு இடத்தில் சிவப்பு திரவம் வந்துள்ளது. அவர் பயந்துபோய் ஊர்மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கிராமமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, அது ரத்தம் என தெரியவந்தது. உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு சுயம்புவாக காட்சியளித்தது மாரியம்மன் சிலை. அதனை அப்படியே அதே இடத்தில் வைத்து மக்கள் வணங்க துவங்கினார்கள். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகையாக இருந்த கோவில் அதன்பின் சுவர்கள் கட்டப்பட்டு கோவிலாக உருவானது. தற்போது இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

Advertisment

ஆண்டுக்கு ஒருமுறை தை மாதம் காணும் பொங்கல் அன்று மட்டும் கோவிலில் அம்மன் ஊர்வலம் கிராமத்துக்குள் சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி, இரவு கிராமத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை கோவிலுக்கு வருவார். ஆடி மாதம் முழுவதும் கோவிலில் திருவிழா நடக்கும். ஆடி மூன்றாவது வெள்ளி, ஐந்தாவது வெள்ளியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து விழா எடுப்பார்கள்.

ஆடி, ஆவணி மாதங்களில் ஏழு நாட்கள், பத்து நாட்கள் என பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருப்பார்கள். இரவில் அம்மன் தன் பகுதியில் வலம்வருகிறாள், அப்போது பக்தர்களின் குறையை உணர்ந்து நிவர்த்தி செய்கிறார் என்பது ஐதீகம். அதனால் கோவில் வளாகத்தில், நடைபாதையில் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் தங்கி பலன் பெறுகிறார்கள் என்றார் பக்தியுடன். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் ஈரத்துணியோடு அங்கப்பிரதட்சணம் வருவார்கள். அதேபோல் ஆடு, கோழி, பன்றி பலி தருவது வழக்கமாக நடைபெறும். 

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் பத்தாயிரம் கோழிகள் அம்மனுக்கு பலி தருவார்கள். ஆடுகள் எண்ணிக்கை அதில் பாதி இருக்கும் என்றார் சிலிப்புடன். 

Advertisment

மஞ்சள் தீர்த்தம்

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது. 

அம்மனுக்கு சாத்திய மஞ்சளை பிரசாதமாக கேட்பவர்களுக்கு மட்டும் தரப்படுகிறது. பக்தர்கள் வாங்கிச்சென்று அம்மை நோய் போட்டவர்களுக்கு பூசினால் சரியாகிவிடும் என்பது ஐதீகம்.

mariamman1

கண் தீர்த்தம்

நல்லெண்ணய், எலுமிச்சை சாறு, பன்னீர் கலந்தது இது. இதை கண் நோய் உள்ளவர்களுக்கு சில சொட்டு கள் விடுவதன்மூலம் கண் நோய் குணமாகும் என்பது பக்தர் களிடம் நம்பிக்கையாக உள்ளது. 

வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12.30-க்கு அம்மனுக்கு அபிஷேகம் முடிந்ததும் வழங்குகின்றனர். இது 50 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் நம்மிடம், "இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூலி வேலைக்காக சில தலைமுறைகளாக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் போய் வேலை செய்தாலும் குலதெய்வத்தை மறக்காமல் ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் இங்கே வந்து பொங்கல் வைத்து அம்மனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். கோவிலுக்கு வெளியே அம்மனை பார்த்தபடி நின்று பக்தர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். இதனால் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் திருமண மண்டபம் கட்டி தந்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

நீங்கள் எங்கள் கோவிலில் சமத்துவத்தை காணலாம். இந்து மக்கள் காய்ச்சல், நோய் குணமாக தர்காவுக்கு சென்று மந்திரித்துக்கொண்டு வருவார்கள். அதேபோல் இஸ்லாமிய மக்கள் அதிகளவில் அம்மனை தரிசிக்கவருகிறார்கள். அம்மன் முன்பு நின்று மனமுருகி வேண்டுதல் வைப்பார்கள், அவர்கள் நினைத்தது நடந்ததும் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். அம்மனுக்கு எப்படி மனிதர்கள் எல்லாரும் ஒன்றோ அதேபோல் மக்களுக்கும் கடவுள் வேறாக இருந்தாலும் நம்பிக்கையோடு வருகிறார்கள், அம்மன் அனைவருக்கும் ஆசிவழங்கி பலன் தருகிறாள் என்றார்.

கோவில் திறக்கும் நேரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை தினங்களில் காலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை தொடர்ந்து கோவில் திறந்திருக்கும். மற்ற தினங்களில் காலை 7.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். செங்கம் மற்றும் போளுர் செல்லும் சாலையில் செங்கத்தில் இருந்து ஏழாவது கிலோ மீட்டரில் இக்கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. பேருந்து வசதி ஒருமணி நேரத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் உள்ளது.